ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்
- மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி:
பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வ சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.
திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.