காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை
- நெல்லி மரத்தின் அடியில் பெண்கள் சிறப்புப்பூஜைகள் செய்து வழிபட்டனர்.
- காணிப்பாக்கத்தில் உள்ள வரதராஜசாமி கோவிலில் சத்யநாராயண பூஜை நடந்தபோது எடுத்தபடம்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் திங்கட்கிழமையான நேற்று சோமவாரத்தையொட்டி கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை நடந்தது. கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர தொடங்கினர். கோவிலின் நடை திறந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபங்களை ஏற்ற ஒதுக்கப்பட்ட 4 பகுதிகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் சார்பில் ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றி அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வழிபட்டனர். தீப ஒளியில் கோவில் வளாகம் ஜொலித்தது.
அதேபோல் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாலை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதன் பிறகு உற்சவர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலின் துணைக் கோவிலான மணிகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடந்தது. அதையொட்டி நெல்லி மரத்தின் அடியில் பெண்கள் சிறப்புப்பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அங்குள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜசாமி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நேற்று சத்யநாராயண பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.