ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ரதசப்தமி விழா 28-ந்தேதி நடக்கிறது
- சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
- 29-ந்தேதி கிரிவலம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 28-ந்தேதி மாத சுத்த சப்தமியையொட்டி ரதசப்தமி விழா நடக்கிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரதசப்தமியையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ருத்ர பாதங்கள் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயண சுவாமி சன்னதி அருகில் காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு இரண்டாவது கால அபிஷேகம் நடக்கிறது.
அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது. இதே போல் 29-ந் தேதி ஆன்மிக சொற்பொழிவாளர் சாகன்ட்டி கோட்டீஸ்வர ராவ் தலைமையில் கிரிவலம் நடக்கிறது.
ஸ்ரீ காளஹஸ்தி எல்லை பகுதியில் கைலாச கிரி மலைகள் வழியாக இந்த கிரிவலம் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.