புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: 1,500 ஆடுகள்-2 ஆயிரம் கோழிகள் நேர்த்திக்கடன்
- புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் நடைபெற்றது.
- விடிய, விடிய விருந்து நடந்தது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான அந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு புனிதர்களின் மின்தேர்பவனி நடைபெற்றது.
நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலியும், அதைத்தொடர்ந்து புனிதருக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி ஏராளமான மக்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறி ஊர்வலமாக கொண்டு வந்து காணிக்கை செலுத்தினர். காலை முதல் மாலை வரை மக்கள் சாரை, சாரையாக வந்து காணிக்கை செலுத்தியபடி இருந்தனர்.
அந்த வகையில் 1,500 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகள், 3 டன் அரிசி, 2 டன் தக்காளி, கத்தரிக்காய் 2 டன், 16 மூடை இஞ்சி, 400 கிலோ பூண்டு, 2½ டன் வெங்காயம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தப்பட்டன. அதை கொண்டு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சேர்ந்து அசைவ உணவு தயாரித்தனர்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் நடைபெற்றது. அதன்பின்னர் அசைவ விருந்து தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த விருந்தில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி உள்ளிட்ட வெளியூர்களை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.