திருமங்கலக்குடியில் இருந்து பிரிந்த சூரியனார் கோவில்
- சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
- சூரியனுடைய கதிர் சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது.
ஆதி காலத்தில் கும்பகோணம் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தபோது திருமங்கலக்குடி, சூரியனார் கோவில்கள் தோன்றின. முதலில் அருகருகே இரண்டு கோவில்களும் ஒரே அமைப்பாக இருந்தன. இந்த இரண்டு தலங்களையும் இணைத்து ஒரே ஆலயமாகத்தான் மூதாததையர்கள் வழிபட்டு வந்தனர்.
நாகரிக மாற்றம் காரணமாகவும், மக்கள்தொகை பெருக்கம் காரணமாகவும் இரண்டு ஆலயங்களும் இரண்டு தனித்தனி வழிபாட்டுத் தலங்களாக மாறிவிட்டன. என்றாலும் சூரியனார் கோவில் இதோடு இணைந்த ஆலயம் தான். அந்த ஆலயம் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் திருமங்கலக்குடி ஆலயத்தின் சிறப்பு தெரிய வரும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு இருந்ததை தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிட்டுள்ளன. சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட சமயம் சவுரம் என்று அழைக்கப்படுகிறது. கணித வகையில் சூரியனைத் தலைமையாக வைத்துக் கணிக்கும் முறைக்குச் சூரிய சித்தாந்தம் என்ற பெயரும், அவ்வகை அளவுக்குச் சவுரமானம் என்ற பெயரும் வழங்குகின்றன.
ரிக்வேதம் மூன்று வித அக்கினிகளில் ஒருவனாகக் கதிரவனை வருணிக்கிறது. சூரியனுடைய சஞ்சாரம் உத்தராணயம் (வடக்கு நோக்கிச் செல்லுதல்), தட்சணாயணம் (தெற்கு நோக்கிச் செல்லுதல்) என வழங்கப்படும்.
தை மாதம் முதல்தேதி சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள். இந்நாள் மகர சங்கராந்தி என்ற பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகிறது. அந்நாளில் தைப்பொங்கல் பெருவிழா உலக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வயல்களில் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிரம்பி வழியும் போது தமிழக மக்கள் உள்ளமும் உவகையினால் பொங்குகிறது. கதிரவன் ஒளியில் புதுப்பானையில் பொங்கலிட்டு கதிரவன் வழிபாடு செய்வது மரபு இருந்தும், சூரியனுக்கு ஆலயங்கள் அபூர்வமாகவே காணப்படுகின்றன.
வடநாட்டில் கொனார்க் என்ற கோவில் பிரசித்தமானது. தென்னகத்தில், இந்தியாவிலேயே வேறெங்கும் காணப்படாத பல அரிய தனிச்சிறப்புகள் நிரம்பியுள்ள சூரியனார்கோவில் இருக்கிறது.
இக்கோவில் கி.பி. 1114-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் சூரிய மண்டலத்தை மையமாக வைத்து, வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. அக்காலத்தில் இது `குலோத்துங்க சோழமார்த்தாண்டாலயம்' என வழங்கிற்று.
கொனார்க் கோவில் இதற்குப்பின் இரு நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது. அதை முதலாம் நரசிம்ம சோடகங்கன் (அரசு: கி.பி. 1238-63) கட்டினான். இவனும் தென்னாட்டுச் சோழர் மரபைச் சார்ந்தவனே என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
ஒரு பெரிய ரதம் போலத் தோன்றும் கொனார்க் ஆலயம் சதுரமான வடிவில் பத்து அடி விட்டங்கள் கொண்ட 24 சக்கரங்களை இணைத்து, ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அநேக சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. ஆறடி உயரமுள்ள சூரியநாராயணர் சிலை நிற்கும் வடிவமாக, பக்கத்தில் மேலும் கீழுமாக நாலு தேவிகளும் தரிசனம் கொடுப்பதுபோல அமைந்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் தற்சமயம் வழிபாடுகள் இன்றி ஒரு அருங்காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. சூரியனார்கோவில் சூரியனுக்குரிய தலம், அதோடு கூட, 9 கிரகங்களுமே இங்கு தனித்தனியாகக் கோவில் கொண்டிருப்பதால் இது 'நவக்கிரக தலம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் மூலவர் சூரியபகவானே. இங்கு நடக்கும் வழிபாடுகள், விழாக்கள் எல்லாம் அவருக்கே. பிரதான மூர்த்தியைச்சுற்றி மற்ற கிரகங்கள் பரிவார தேவதைகளாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கட்டிட அமைப்பும். சந்நிதிகளின் வகுப்பு முறையும், தமிழகத்துச் சிற்பிகளின் கட்டிடக் கலையாற்றலை மட்டுமல்லாமல். அவர்களுடைய வான மண்டல அறிவாற்றலையும் எடுத்துக் காட்டுகிறது. வானமண்ட லத்தின் 360 டிகிரி வட்டத்தைக் கணக்கிட்டு, மையத்தில் சூரியனையும், சுற்றுவட்டத்தில் அந்தக் கணக்கின்படியே மற்றக் கிரகங்களையும் அமைத்துள்ளார்கள்.
ஆண்டுக்கு இரண்டு முறை மும்மூன்று நாட்களுக்குச் சூரியனுடைய கதிர் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது. இங்குள்ள உற்சவ விக்கிரகங்கள் மிக அழகானவை. சூரியமூர்த்தி தம் இரு கரங்களிலும் தாமரையை ஏந்தி வட்ட வடிவமான பிரபையுடன் அழகுச் சுடராக நிற்கிறார். கோவிலிலுள்ள அஸ்த்திர தேவர் பிம்பத்தில் சூரிய பகவானே காணப்படுகிறார்.
சிற்பச் சிறப்பும், வான மண்டல கோள்களின் நுட்ப கணித இயல்பும், வழிபாட்டு நெறி முறைகளும் ஒருங்கி ணைந்த இக்கோவிலில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏழரையாண்டுச் சனி, அட்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்களும், நவக்கிரக தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து தங்கி, உபவாசம் இருந்து, தீர்த்தங்களில் நீராடி, திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்களாம்பி கையையும், நவகோள் களையும் முறைப்படி வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. நவக்கிரக சாந்தி செய்வதற்கும், கிரகப் பெயர்ச்சிகளின் போது வழிபாடு செய்யவும் மக்கள் திரளாக இங்கு வருகின்றனர்.