வழிபாடு

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-11-20 03:41 GMT   |   Update On 2023-11-20 05:55 GMT
  • சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்.
  • சுவாமி-அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு மாலையில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல் நடைபெற்று இரவு 11 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ராஜகோபுரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெரு மானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

கந்தசஷ்டி திருவிழா 8-ம்நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வருதல் நடக்கிறது.

திருவிழாவில் 21, 22, 23-ந் தேதி வரை 3 நாட்களும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். *** திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

Tags:    

Similar News