பக்தர்கள் பெயரில் ஒருநாள் அன்னதானம் செய்ய ரூ.33 லட்சம் காணிக்கை வழங்கலாம்: திருப்பதி தேவஸ்தானம்
- காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
- காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்னதானத்திற்காக நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 டன் முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
எனவே அன்னதானம் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் ஒரு நாளைக்கு தேவையான அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலுத்தலாம்.
மேலும் காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்னதான செலவுத் தொகையை வழங்கும் பக்தர்கள் அன்னதானம் செய்யும் நாள் அன்று அவர்களே முன் நின்று அன்னதானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.