- தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும்.
- தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும்.
தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியை, `தைப்பூசம்' என்ற பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தான் முன்னொரு காலத்தில் உலகம் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப் படுகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி விசேஷ பிரம்மோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில் இங்கே `அஸ்வமேத பிரதட்சணம்' என்று கோவிலைச் சுற்றி வருவது விசேஷம். சோழ மன்னர்களில் ஒருவன் இவ்வாறு சுற்றி வந்து, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும். முருக பக்தர்களுக்கு தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும். `சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை' என்பது பழமொழி.
சூரபத்மன்-தரகாசுரன் பிறந்த கதை
அசுர குல தலைவனாக அசுரேசன் இருந்து வந்தான். அவனுக்கு சுரசை என்னும் மகள் பிறந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரியார் மாய வித்தைகளை அவளுக்கு கற்றுக்கொடுத்தார். அதனால் அவளை `மாயை' என்றும் அழைத்தனர். அந்த அசுரப் பெண் காசியப முனிவரை விரும்பி திருமணம் செய்துகொண்டாள். அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்ற மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். மாயை தன் குழந்தைகளை நோக்கி "நீங்கள் கடும் தவம் செய்யுங்கள். `நரமேத யாக'த்தை செய்யுங்கள்" என்றாள்.
அவர்கள் ரத்தத்துடன் கலந்த பொருட்களை அக்னியில் சேர்த்து, ரத்தம், மாமிசம் முதலானவற்றால் யாகம் நடத்தி கடும் தவம் செய்தனர். முடிவில் நரமேத யாகத்திற்காக தங்கள் உடல்களையே இழக்கத் தயாராகினர். தாரகாசுரன் தனது பெரிய யானைத் தலையை அறுத்து, ஹோமத்தில் இட்டான். (இந்த தாரகாசுரன் காசியப முனிவரும், மாயையும் யானை உருவத்தில் இருந்தபோது பிறந்தவன்).
சூரபத்மனுக்கு தம்பியாகிய தாரகாசுரன் இந்த கடும் தவத்தால் பல அரிய வரங்களைப் பெற்றான். பின்னர் அஷ்டதிக் பாலகர்களையும் வென்று, மேரு மலையின் தென்புறத்தில் மாயாபுரி என்னும் பெரிய நகரத்தை உருவாக்கினான்.
மேலும் தன் அசுர சேனைகள் தங்கவும் பெரிய நகரங்களை உருவாக்கினான். சூரபத்மனுக்கு பானுகோபன் உள்பட பல குழந்தைகள் பிறந்தன. சிங்கமுகனுக்கு அதிசூரன் என்னும் புதல்வனும், 100 பிள்ளைகளும் பிறந்தனர். தாரகாசுரனுக்கு அசுரேசன் என்னும் மகன் பிறந்தான். இவர்களது சகோதரி அஜமுகி, துர்வாசரை மணந்துகொண்டதால், வாதாபி மற்றும் வில்வலன் என இரு குழந்தைகள் பிறந்தன.
முருகப்பெருமான் அவதாரம்
ஒரு சமயம் பரமேஸ்வரனை பிரிந்து பார்வதி தேவி பூலோகத்தில் பிறந்தாள். இமயவன் புத்திரியாக பிறந்து சிவபெருமானையே அடைய வேண்டும் என்று கடுந்தவம் இருந்தாள். அந்த சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன், சிவபெருமான் மீது காமக் கணைகளைத் தொடுத்து, அவருடைய தியானத்தைக் கலைத்தான். இதனால் மன்மதன் துன்பப்பட்டது ஒருபுறம் என்றாலும், தியானம் கலைந்த சிவபெருமான், பார்வதி தேவியின் தவத்தை அறிந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
அப்போது தேவர்கள், ``இணை இல்லாத இறைவா... எங்கள் துயர்தீர தங்கள் சக்திக்கு நிகரான ஒரு குமரன் பிறக்க வேண்டும். அப்பொழுதுதான் சூரபத்மன், தாரகாசுரன் போன்றவர்களின் ஆணவம் அழியும்" என்று வேண்டினர்.
அப்பொழுது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு, ஆறு பொறிகளாக பிரிந்தது. அந்த நெருப்பால் உலகம் முழுவதும் தகிக்க ஆரம்பித்தது. இதைக்கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். சத்தம் கேட்டு பார்வதி தேவி அங்கே விரைந்து வர, அவரது உடலில் இருந்து சிந்திய வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் தோன்றினர்.
பார்வதியின் கால் சிலம்பில் இருந்து உதிர்ந்த நவரத்தினங்கள் ஒன்பதில் இருந்து 9 சக்திகள் பிறக்க, அந்த நவக்கன்னியர்களிடம் இருந்து 9 வீரர்கள் தோன்றினர். அவர்கள் வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமாமகேந்திரர், வீரமா மகேஸ்வரர், வீரமா புரந்தரர், வீரராகர்த்தர், வீரமார்தாண்டவர், வீராந்தகர், வீரதீரர் என்ற பெயர்களைப் பெற்றனர். முருகப்பெருமான் அவதாரத்திற்குப் பின் அவர்கள் பூலோகம் வந்தனர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய அந்த ஆறு தீப்பொறிகளையும், தகிக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வாயு பகவான், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் திருமால் ஆணைக்கிணங்க கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்.
கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி பூமியில் வந்து கையில் எடுக்க, ஆறு குழந்தைகளும், ஆறுமுகம் 12 கைகளை உடைய ஒரு குழந்தையாக உருவெடுத்தது. இதையடுத்து அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் ஒன்றை, ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம் `தைப்பூசம்' என்று போற்றப்படுகிறது.