- பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது.
- பித்து பிடித்தவராக அலைந்து திரிந்தார் சிவபெருமான்.
சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையிலே பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.
கபாலம் நீங்காத நிலையிலுள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார்.
செஞ்சியில் உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை. அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள்.
செஞ்சியில் உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையில் உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.
சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பல வகையில் நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.
சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாயமாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.
அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.
உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய்.
அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.
திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.
சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார். உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள்.
எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.
பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும், லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையில் இருக்கும் கபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.
இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி, மகாலட்சுமி இடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும்.
அப்படி போடும் போது, உணவுகளை மூன்று உருண்டைகளாக செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.
உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.
சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார்.
அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள். பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.
ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியை தான் அகிலமெங்கும் மயான சூறை என்று கொண்டாடுகிறார்கள்.