வழிபாடு

திருப்பதி ஏழுமலையானின் திரு அவதார கதை!

Published On 2024-10-02 03:40 GMT   |   Update On 2024-10-02 03:40 GMT
  • பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர்.
  • பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு.

ஒருமுறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழிசெய்ய வேண்டும் என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்... இதுபற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.

பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு.


இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்த கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார்.

அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.

பிரம்மா இதை கண்டித்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு, சிவலோகம் சென்றார். சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார்.

பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.

அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமிதேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டுமென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார்.

உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் எட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்துவிட்டார்.

தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்பு கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.

அவரைத் தேடி பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.

இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர்.

இத்தனை சங்கதிகளையும் சூரிய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.

அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார்.

இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாரியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார்.

தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.

ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அங்கே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு ஏதுமறியாமல் விழித்தான்.

அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லா காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.


ஸ்ரீ வராகசுவாமி ஆலயம்:

இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார்.

அதற்கு நன்றி கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.


பத்மாவதி தாயார்:

இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான்.

பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது.

அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி என பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.

இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார்.

அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.


கோவில் வரலாறு:

தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.

ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசு காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843-ல் இருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

கோவில் அமைப்பு:

திருப்பதி திருமலையின் மலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில், மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலை தான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.

Tags:    

Similar News