வழிபாடு

அனுமனுக்கும், அர்ஜுணனுக்கும் நடந்த விபரீத போட்டி

Published On 2024-04-14 05:49 GMT   |   Update On 2024-04-14 05:49 GMT
  • இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது.
  • கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.

ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு `ராமநாமம்' ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது.

`ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், `சேதுவுக்கும், இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான் அந்த சந்தேகம்.

தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று, "வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும்?" என்று கேட்டான்.

அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு செய்தார்.

"சரங்களால் கட்டப்படும் சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித் தாங்கும்?" என்று அனுமன் கேட்டார். உடனே அர்ஜூனன். "ஏன் தாங்காது, என்னால் முடியும். நான் ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக் கூட்டங்களையும் அது தாங்கும்" என்றான். மேலும், "பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர்துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின்மேல் உள்ள நம்பிக்கையால்.

அனுமனோ, "நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்கிறேன்" என்கிறார். போட்டி தொடங்கியது.

 அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்தொடங்கினான். அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.

அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான். "போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்" என்றவாறு வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான்.

அனுமன் எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை. அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது. குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர் தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார்.

பின்பு அவர், "எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது" என்றார். தொடர்ந்து, "நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்" என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்கொண்டனர்.

'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான். சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல் பாலத்தில் ஏறினார் அனுமன்.

 பாலம் அப்படியே இருந்தது. ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை. பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன் "பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல் எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?" என்று கேட்டான்.

அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, "யார் நீங்கள்?" என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன் காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி பெறுகின்றனர். பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தியும், நாமஸ்மரணையும் தான்.

இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது, தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ராமநாமத்தை ஜெபித்தான். எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.

மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல் தோற்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே" என்றார். கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும். எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனை சீண்டினான் அர்ஜூனன். அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

 உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால், இறைவன் ஒருவன் தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள். இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.

Tags:    

Similar News