வழிபாடு

ஆழியாற்றங்கரையில் மயான பூஜைக்கு பீடம் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆழியாற்றங்கரையில் நாளை மயான பூஜை

Published On 2023-02-02 05:51 GMT   |   Update On 2023-02-02 05:51 GMT
  • 5-ந்தேதி தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
  • 6-ந்தேதி குண்டம் இறங்குதல் நடக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயான பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரையில் நடக்கிறது. இந்த பூஜையில் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மயான பூஜைக்காக பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மயான பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சித்திரைத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. 6-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்

7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News