வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்

Published On 2024-03-25 05:06 GMT   |   Update On 2024-03-25 05:08 GMT
  • நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
  • 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News