திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.
- மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலான இக்கோவில் நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய தலமாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காட்டில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் இந்த தலம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுடைய ஆனந்த தாண்டவத்தின் போது அவருடைய 3 கண்களில் இருந்து சிந்திய நீர்த்துளிகள் இங்கு அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை திருக்கல்யாண விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. பின்னர் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி மாதவன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பிராமணர் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.