தென் தமிழகத்தில் திருகார்த்திகை தீபம்
- திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
- பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.
தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.
திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.
பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.
இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.
மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.
இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.
இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.
பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.
சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.
அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.
அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.
கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.
7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.
கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!
அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.