வைகாசி விசாக திருவிழா: திருப்பரங்குன்றத்தில் அபிஷேக பால் குழாய் வழியாக பக்தர்களுக்கு கிடைக்க ஏற்பாடு
- 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.
- பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுதல் நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கும்.
அதன் பால் பெரிய சில்வர் தொட்டியில் விழும். பிறகு அங்கு இருந்து கோவில் வெளிப்புறமான சஷ்டி மண்டப வளாகம் வரை குழாய் வழியாக அபிஷேகம் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விசாக கொறடு மண்டபத்தில் இருந்து சஷ்டி மண்டபம் வளாகம் வரை 100 அடி நீளத்திற்கு புதியதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்தர்கள் பாட்டில் மற்றும் பாத்திரங்கள் மூலம் அபிஷேக பால் பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாக கொறடு மண்டபத்தில் தற்காலிகமாக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது.