திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலய திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- நாளை பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது.
- 4-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் மூவொரு இறைவன் பேராலயம் குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமாக உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு உறுதிபூசுதல் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்குதந்தை பீட்டர் முன்னிலை வகிக்கிறார்.
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு முளகுமூடு மறை வட்டாரத்தில் இருந்து பவனியாக கொண்டுவரப்படும் கொடி பேராலயம் வந்தடைகிறது. தொடர்ந்து முன்னாள் பங்குதந்தை யேசுதாசன் தாமஸ் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவடட குருகுல முதல்வர் ஹிலேரியுஸ் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் முளகுமூடு மற்றும் காரங்காடு மறை வட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மரிய ராஜேந்திரன் மறையுரையாற்றுகிறார்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்தந்தை இயேசுரத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றுகிறார். மறை மாவட்ட செயலாளர் பேரருட்தந்தை ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார். மறைமாவட்ட நிதிக்காப்பாளர் அருட்தந்தை அகஸ்டின், பணி குழுக்களின் இயக்குனர் அருட்தந்தை ஜெலஸ்டின் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.
விழாவில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி காலை 9 மணிக்கு பேராலய பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 4-ந்தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்துவபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணியாளர் புஷ்பராஜ், பேராலய பங்குதந்தை, அருட்சகோதரிகள், அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.