வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் கருடசேவை

Published On 2024-04-17 09:54 GMT   |   Update On 2024-04-17 09:54 GMT
  • வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
  • விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News