திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நாளை நடக்கிறது
- நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும்.
- சிவபக்தர்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
திருச்சி திருவானைக்காவலில் பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. படைப்பு கடவுளான பிரம்மா, சிறிது நேர மனசஞ்சலத்தால் கடும் சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்டார். இவர் சாபநிவர்த்தி வேண்டி சிவனை வேண்டினார். உரிய காலம் வரும்போது திருவானைக்காவலில் சாப விமோசனம் தருவதாக இறைவன் கூறியதையடுத்து, பிரம்மா திருவானைக்காவலில் ஒரு குளம் ஏற்படுத்தி அக்குளக்கரையில் தங்கி கடும் தவம் செய்து வந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், சாபவிமோசனம் அளிப்பதற்காக கைலாயத்திலிருந்து புறப்பட்டபோது, பார்வதி தேவி தானும் வருவதாகக்கூறவே, இருவரும் சேர்ந்து திருவானைக்காவலுக்கு வந்தனர். ஏற்கனவே பெண்ணாசையினால்தான் பிரம்மனுக்கு சாபம் கிட்டியது, எனவே தற்போது பெண்ணாகிய நீ வரவேண்டாம் என்று ஈசன் கூறினார். அதற்கு தேவி மறுத்து அப்படி ஏதும் நடக்காது, எனினும் பாதுகாப்பிற்காக நான் ஆண்போல் வேடமிட்டு வருகிறேன். நீங்கள் பெண்போல் வாருங்கள் என்று கூறினாள்.
இந்த யோசனைப்படி பிரம்மனுக்கு சாபவிமோசனமளிக்க அவர்கள் மாறுவேடத்தில், அதாவது சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் வேடமணிந்து வந்தனர். ஏற்கனவே தனது செயலால் மனக்கவலையிலிருந்த பிரம்மன், ஈசன், ஈஸ்வரி இவ்வாறு வந்தது குறித்து மிகவும் வருந்தி ஈஸ்வரனை வணங்கினார். இதையடுத்து சிவனும், பார்வதியும் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தனர். இந்த புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பஞ்சப்பிரகார விழா நிகழ்ச்சிகள் இக்கோவிலில் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்சப்பிரகாரவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. பஞ்சப்பிரகார புறப்பாட்டின்போது உற்சவ மூர்த்திகள் தங்களது பரிவாரங்களுடன் மேளதாளம் போன்ற ஆரவாரங்களின்றி, நான்கு வேதங்கள், திருமுறைகள் மற்றும் பஞ்சாட்சர ஜபம் ஆகியவற்றை மட்டும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நான்கு பிரகாரங்களில் வலம் வருவார்கள், இதற்கு மவுனோற்சவம் என்று பெயர். தெற்கு நான்காம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தபின் வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளத்துடன், நாதஸ்வர இன்னிசையுடன் வர பஞ்சமூர்த்திகள் தங்களின் மீதி பிரகார உலாவைத் தொடருவார்கள்.
இதை முன்னிட்டு நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். இரவு 8 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்படுவர். திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த தீட்சை பெற்ற சினவடியார்கள் மற்றும் சிவபக்தர்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சிறப்பு திருமுறை பாராயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னணி ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்டு இரவு முழுவதும் பன்னிரு திருமுறைகளை ஊர்வலப்பாதையிலும், கோவில் அரங்கிலும் பக்கவாத்தியங்களோடு இசைப்பர்.