வழிபாடு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்

Published On 2023-03-17 07:28 GMT   |   Update On 2023-03-17 07:28 GMT
  • 23-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.
  • ஏப்ரல் 6-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இவ்விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் எட்டுத் திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நாளை காலை புறப்பட்டு கொடிமரம் அருகே வருவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவர்.

அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் காலை 6.25 மணிக்கு மேல் காலை 7.50 மணிக்குள் மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். மாலை சுவாமி, அம்மன் கேடயத்தில் புறப்பட்டு 4-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

விழாவின் 2-ம் நாளான நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 20-ந்தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 24-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 27-ந்தேதி வெள்ளை சாற்றி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 8-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News