திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர்.
- பவுர்ணமி இன்று மாலை 5.49 மணி வரை உள்ளது.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர். அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.42 மணிக்கு தொடங்கியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானது.
பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது.
நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
பவுர்ணமி இன்று (திங்கள்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில் :-
தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்றனர்.