வழிபாடு
சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

திருவாதிரை திருவிழா: குற்றாலம் சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

Published On 2023-01-06 05:17 GMT   |   Update On 2023-01-06 05:17 GMT
  • இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனை நடந்தது.
  • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் அனைத்து சிவாலயங்களிலும் திருவாதிரை திருவிழாவானது, மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக, சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, நெல்லை தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை என 5 சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பழங்கால பாரம்பரியத்தை பறைசாற்றும் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வானது கடந்த மாதம் 28 -ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து, 8-ம் திருநாளான கடந்த 4-ந்தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

10-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நடராஜபெருமானின் 5 சபைகளில் ஒன்றாக கருதப்படும் குற்றாலநாத சுவாமி கோவில் சித்திர சபையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை கண்டு மனம் மகிழ்ந்து பக்தி பரவசத்துடன் கடவுளை வணங்கி சென்றனர்.

Tags:    

Similar News