திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் பவனி
- ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா.
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 2-இரண்டாவது நாளான நேற்று காலை ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். நேற்று மாலை திடீரென 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்து அவதி அடைந்தனர். நேற்று இரவு ஏழுமலையான் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடன கலைஞர்கள் சாமி ஊர்வலத்தில் முன்பாக கண்ணைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.
திருப்பதியில் நேற்று 75 552 பேர் தரிசனம் செய்தனர் 35 885 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய கெங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.