திருப்பதியில் இன்று ரதசப்தமி: ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா
- இன்று மதியம் புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
- இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது.
இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன சேவையும், 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன சேவையும் நடந்தது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை அங்குள்ள புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடுவார்கள்.
மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலாவும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது.
ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.