திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்: வஜ்ர கவசத்தில் உற்சவர்கள் வீதிஉலா
- 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
- இன்று முத்துக் கவசத்தில் உபயநாச்சியார்களுடன் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜோஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலின் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன் ஒரு பகுதியாக காலை யாகசாலையில் ருத்விக்குகள் சாந்தி ஹோமம் நடத்தினர். சத கலச பிரதிஷ்டை, ஆராதனை நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு நவ கலச பிரதிஷ்டை, ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேத பண்டிதர்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூேதவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு வஜ்ர கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்கள் வஜ்ர கவசத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) முத்துக் கவசத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்கக் கவசத்திலும் உபயநாச்சியார்களுடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.