வழிபாடு
null

வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாற... இதை செய்யுங்கள்...

Published On 2024-05-29 03:51 GMT   |   Update On 2024-05-31 04:26 GMT
  • திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
  • புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.


புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத : பிரசோதயாத் !

எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.

புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.

இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

Tags:    

Similar News