உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா நாளை தொடங்குகிறது
- இந்த விழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
- 5-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா நாளை (வௌ்ளிக்கிழமை) தொடங்கி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார்.
இதைத் தொடர்ந்து 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு தினந்தோறும் நடைபெறுகிறது. மேலும் காமதேனு, பூதம், அன்னம், கயிலாயம், யானை, சிம்மம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருதல் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 4-ந் தேதி காலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். பிப்ரவரி 5-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் கேடையத்தில் புறப்பட்டு காராளம்மன் கோவிலுக்கு சேர்தல், அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடும், மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்று வெக்காளியம்மன் கோவில் வந்து சேரும் நிகழ்வும், இரவு 7 மணிக்கு அம்மன் கேடையத்தில் திருவீதி உலா வருதலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.