வழிபாடு

முக்தி பேற்றினை அருளும் உத்தர காசி விஸ்வநாதர்

Published On 2024-01-05 02:30 GMT   |   Update On 2024-01-05 02:30 GMT
  • இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன.
  • வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி.

இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள், திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெள்ளைவெளேர் என்ற பளிங்கு நிறத்தில் தெய்வத் திருமேனிகள் பளிச்சென்று தோற்றம் அளிக்கின்றன. அந்த தெய்வ உருவங்களை நாம் தொட்டு அபிஷேகம் செய்யலாம். மலர் மாலை அணிவிக்கலாம். இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் 'தேவபூமி' என அழைக்கப்படுகிறது.

கேதார்நாத், கங்கோத்ரி, யமுனுத்திரி, பத்ரிநாத் போன்ற பல புனித பகுதிகளை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி. அடுத்ததாக உத்தரகாசியில் சார் தாம் பாதையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவில், கலியுகத்தின் இரண்டாவது கோவில் என அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. உத்தரகாசி நகரம், கங்கை நதிக்கரையில் வரூணா மற்றும் அசி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.

 காசி அல்லது வாரணாசி நகரம், தண்ணீரால் மூழ்கடிக்கப்படும்போது காசி விஸ்வநாதர். உத்தரகாசியில் உள்ள இந்தக் கோவிலுக்கு மாற்றப்படுவார் என்பது நம்பிக்கை. அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழுவடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.

கங்கோத்ரி, யமுனுத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களுக்கும் (சார் தாம் பயணம்) நுழைவு வாசலாக விளங்குவது, உத்தரகாசி. இது ரிஷிகேசில் இருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் கங்கோத்ரி தாமுக்கு செல்லும் பிரதான சாலை அருகில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் பழங்கால பிராதன பின்னணியில் சிகரங்களாக அடுக்கி வைக்கப்பட்ட தோற்றத்தில் உள்ள கோபுரத்துடன் கட்டப்பட்டு உள்ளது. இவ்வாலயத்தில் அருளும் மூலவரான சிவபெருமான், 56 சென்டிமீட்டர் உயரம் உள்ள லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

கருவறையில் பார்வதி தேவி, விநாயகப்பெருமான் உள்ளனர். கருவறைக்கு வெளியே நந்தி உள்ளது. மார்க்கண்டேய முனிவர் தியானத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் மற்றும் ராமர் சீதை ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. எமனின் கோரப்பிடியில் இருந்து தன் பக்தன் மார்க்கண்டேயரைப் பாதுகாத்து அவருக்கு அருளிய திருத்தலமாகவும் உத்தரகாசி விளங்குகிறது.

தல வரலாறு

ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர், பரசுராமன். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறார். இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, 'பரசு' என்ற கோடரியை பெற்ற காரணத்தால், இவருக்கு 'பரசுராமன்' என்ற பெயர் ஏற்பட்டது. 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்ற வாசகத்தை உலகத்துக்கு உணர்த்த, தந்தையாரின் கட்டளைப்படி செயல்பட்டு, பெற்ற தாயாரான ரேணுகா தேவியின் தலையை வெட்டியவர்.

ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனன் என்ற மன்னன், காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த பசி உண்டானது. பசிக்கான உணவு காட்டில் கிடைக்காத நிலையில், அங்கே ஆசிரமம் அமைத்திருந்த ஜமதக்னி முனிவரின் குடில் தென்பட்டது.

அந்தக் குடிலுக்குச் சென்ற கார்த்தவீர்யார்ஜூனன், ஜமதக்னி முனிவரிடம் தன் பசியைப் போக்கும்படி கேட்டுக்கொண்டான், ஜமதக்னி முனிவரிடம் நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற பசு இருந்தது. அதன் மூலம் உணவை வரவழைத்து கார்த்தவீர்யார்ஜூனனுக்கும், அவருடன் வந்த படைவீர்களுக்கும் உணவு பரிமாறினார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கார்த்தவீர்யார்ஜூனன், அந்தப் பசுவை தனக்கு வழங்கும்படி ஜமதக்னி முனிவரிடம் கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர் மறுப்பு தெரிவிக்கவே, கார்த்த வீர்யார்ஜூனன் அந்தப் பசுவை முனிவருக்கு தெரியாமல் கவர்ந்து சென்றான். இதை அறிந்த முனிவர், தன் மகன் பரசுராமரிடம் சொல்ல, கோபத்துடன் சென்ற பரசுராமன், மன்னனைக் கொன்று பசுவை மீட்டார்.

கார்த்த வீர்யார்ஜூனன் அந்தணன் என்பதால், அவனைக் கொன்ற பாவம் நீங்க, தீர்த்த யாத்திரை சென்று வரும்படி பரசுராமனிடம் ஜமதக்னி முனிவர் கூறினார். அதன்படி பரகராமன் தீர்த்த யாத்திரை சென்றார். இந்த நிலையில் தனது தந்தையைக் கொன்றதால் ஜமத்கனி முனிவரிடமும், பரசுராமரிடமும், கார்த்தவீர்யார்ஜூனனுடைய மகன்கள் தீராத பகை கொண்டிருந்தனர். அவர்கள் பழிக்குப்பழி வாங்க தீர்மானித்தனர்.

ஒரு நாள் ஆசிரமத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரை, கார்த்தவீர்யார்ஜூனனின் மகன்களில் ஒருவன் வாளால் தலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டான். இதை அறிந்த பரசுராமன், 'தந்தையை கொன்ற மன்னனின் 21 தலைமுறையை கூண்டோடு அழிப்பேன்' என்று சூளுரைத்தார். பின்னர் திக்விஜயம் சென்று சத்திரிய குலத்தைச் சேர்ந்த 21 தலைமுறையினரை வேரற்று போகும்படி செய்தார்.

அந்த பாவம் தீர்வதற்கு வேள்வி செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தர காசியில் ரிஷிகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தவம் செய்த இடத்தில் பரசுராமர், காசிவிஸ்வநாதர் கோவிலைக் கட்டி முடித்தார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்கிறது.

 திரிசூல மகிமை

உத்தரகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு எதிரில், பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கனமான திரிசூலம் 26 அடி உயரம் உள்ளது. இது துர்க்கா தேவியால் பிசாசுகள் மீது வீசப்பட்டது. அன்னை சக்தி இங்கு திரிசூல வடிவில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார்.

உத்தரகாண்டின் பழைய நினைவுச் சின்னமாக இங்குள்ள திரிசூலம் கருதப்படுகிறது 26 அடி உயரம் உள்ள திரிசூலத்தில் நாக வம்சத்தின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த திரிசூலத்தின் விசேஷமான அம்சம் என்னவென்றால், இதை முழு உடல் பலத்தால் நகர்த்த முடியாது. மாறாக உங்கள் விரல் நுனியை வைத்து லேசாக அழுத்தும் போது அது அதிர்கிறது.

இந்த திரிசூலத்துக்கு பக்தர்கள் தண்ணீரால் அபிஷேகம் செய்து பூ வைத்து வழிபடுகிறார். திரிசூலத்தை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை வேண்டி வருபவர்களும் இந்த திரிசூலத்தை வணங்கி வழிபட்டால், அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News