வழிபாடு

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் 17 நாட்களில் 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2023-01-09 08:54 GMT   |   Update On 2023-01-09 08:54 GMT
  • சொர்க்க வாசல் திறப்பு அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  • கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தில் 7.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News