வசந்தோற்சவம் 2-வது நாள்: தங்கத்தேரில் மலையப்பசாமி வீதிஉலா
- சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமலை:
திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.
வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.