கழுகுகளால் வணங்கப்பட்ட வேதகிரீஸ்வரர்!
- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை உள்ளது.
- முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை மீது அமைந்துள்ள சொக்கநாயகி உடனாய வேதகிரீஸ்வரர் கோவிலும், மலை அடிவாரத்தில் தாழக்கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி உடனாய பக்தவத்சலேஸ்சவரர் கோவிலும் இருக்கின்றன.
திருக்கழுக்குன்றத்திற்கு, கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சிதீர்த்தம் என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
வேதமலையின் மீது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலம் பிரம்மன், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது. மேலும் கழுகுகள் பூஜித்த பெருமையும் கொண்டது.
நான்கு வேதங்களும் மலையாக அமைந்ததால், இந்த மலைக்கு 'வேதமலை', 'வேதகிரி' என்று பெயர். வேதகிரியின் மீது எழுந்தருளி அருள்பாலிப்பதால் இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.
வேதகிரீஸ்வரரை வணங்கி அருள்பெற 567 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஏறும் போது வலது புறத்தில் கம்பாநதி சன்னிதி உள்ளது. மலைக் கோவில் கருவறையில் இறைவன் சுயம்புத் திருமேனியாக வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.
பிரகாரத்தில் நர்த்தன விநாயகரும், சொக்கநாயகி அம்பாளும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகார கருவறை கோஷ்டங்களில் புடைப்புச் சிற்பங்களாக அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உள்ளனர்.
வழக்கமாக சிவாலயங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் பலிபீடமும், கொடிமரமும் மட்டுமே உள்ளன.
பட்சி தீர்த்தம்
கிரேதா யுகத்தில் சண்டன் - பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி - சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் - மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி வேதகிரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார்கள்.
கலியுகத்தில் பூஷா - விருத்தா ஆகிய முனிவர்கள், இத்தல இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்கள் இருவரும் இத்தல இறைவனிடம் சாயுட்சய வரம் வேண்டும் என்று கேட்டதால், இறைவனின் அருளாசிப்படி கழுகாக மாறினர்.
பின்னர் பல ஆண்டு காலம் பகல் வேளையில் வேதமலை வந்து இறைவனை வழிபட்டு அமுதுண்டு வந்தனர். இரண்டு கழுகுகள் வலம் வந்த காரணத்தால் இந்த ஆலயம் 'பட்சி தீர்த்தம்' என்ற பெயர் பெற்றது.
சங்கு தீர்த்தம்
மார்க்கண்டேய முனிவர் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய முற்பட்டார். அப்போது 'ஓம்' என்ற ஒலியுடன் சங்கு ஒன்று தீர்த்தத்தில் தோன்றியது. அந்த சங்கைக் கொண்டு சிவபெருமானை, முனிவர் பூஜித்தார்.
அன்று முதல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இதனால் இத்தீர்த்தம் 'சங்கு தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத்தீர்த்தத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.
வேதமலையின் சிறப்பு
வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள வேதமலையானது, சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மலையை வலம் வருகிறார்கள். வேதகிரீஸ்வரரை தரிசிக்க வேதமலையில் ஏறும்போது மலைப்பாதையில் இடை இடையே ஓய்வெடுத்துச் செல்ல சிறு மண்டபங்கள் உள்ளன.
இந்த திருக்கோவிலில் இறைவனை தரிசிக்க ஏறிச் செல்ல ஒரு மலைப்பாதையும், தரிசனத்தை முடித்துக் கொண்டு இறங்கி வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியாகவே செல்லும்.