ஜலகண்டேஸ்வரர் கோவிலில் புதிதாக ரூ.5 கோடியில் தங்கத்தேர்: கும்பாபிஷேகத்தன்று பிரதிஷ்டை
- 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவிலில் பெரிய கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. பின்னர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகளான தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், உப தலைவரான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, பொருளாளர் ஏ.பி.சண்முகம், உதவி தலைவர் வி.எஸ்.ரமேஷ், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி சின்ன கொடிமரத்துக்கு ரூ.43 லட்சத்திலும், பெரிய கொடி மரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலும் தகடுகள் பொருத்தப்படுகிறது. இவை 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து கோவிலுக்கு பெருமை சேர்க்கும்.
இதுதவிர லிங்கத்துக்கும் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள வெள்ளி பொருட்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் பெருமைகள் கொண்ட புத்தக மலர் வெளியிடப்படும்.
சாமி வீதி உலாவுக்காக உபயதாரர் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் தங்கதேர் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகம் அன்று அதற்கும் பிரதிஷ்டை செய்யப்படும். கும்பாபிஷேகத்துக்கு பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால் கோட்டைக்குள் 150 கார்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த கும்பாபிஷேகத்தில் ஆதினங்கள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.