வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
- இன்று இரண்டாம், 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
- நாளை இரவு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
வேலூர் :
வேலூரில் வரலாற்று புகழ்பெற்ற கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆயத்த பணிகள், ராஜ கோபுரம், 2-வது கோபுரம், வலம்புரி விநாயகர், வெங்கடேச பெருமாள் சன்னதி, வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி, மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதிகளில் பாலாலயம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது. பாலாலயம் செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க படவில்லை.
கோபுர கலசங்கள் கழற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. அனைத்து மூலவர் சன்னதிகளில் முகவர்களுக்கு தங்க வெள்ளி கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் வெளிபிரகார வளாகத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ந் தேதி மகா கணபதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. 22-ந் ேததி நவக்கிரக பூஜை, சுதர்சன பூஜை, சாந்தி ஹோமம் நடந்தது.
நேற்று ராஜகோபுரத்திற்கு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. முன்னதாக காலை ராஜகோபுர கலசத்துக்கு கோவில் நிர்வாகிகள் தலைமையில் பூஜை செய்யப்பட்டது. இரவு அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், மற்றும் முதல் கால பூஜைகள் நடந்தன.
இன்று (சனிக்கிழமை) காலை இரண்டாம் கால பூஜை மற்றும் மாலையில் 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை நான்காம் கால பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதிய தங்க தேர், ராஜ கோபுரம், கோவில் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
விழாவில் காஞ்சி காமகோடி பீடம் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள், வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா, வேலூர் வனதுர்கா பீடம் துர்கா பிரசாத் சுவாமிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்கப்பா ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபன தலைவர் சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், உப தலைவர்கள் ெவங்கடசுப்பு, தர்மலிங்கம், அச்சுதானந்தம், பொருளாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள், கோவில் சிவாச்சாரியார்கள், குருக்கள் செய்து வருகின்றனர்.