வழிபாடு

கலைகளில் சிறந்து விளங்கச்செய்யும் வித்யாபதீஸ்வரர்

Published On 2024-03-18 05:38 GMT   |   Update On 2024-03-18 05:38 GMT
  • கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன.
  • பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம்.

'பொழியும் அடியார்கள் கோடிகுறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே' என்கிற அருணகிரிநாதரின் வரிகளை, தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் கூறி இன்புறுவார் கிருபானந்த வாரியார்.

நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ஒரு முறை செல்லலாம். இரண்டு முறைசெல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைந்து விடுவார். இது இயற்கையான ஒன்று. ஆனால் நமது குறைகளை ஒருவரிடம் கோடி முறை சென்று சொன்னாலும் கோபப்படாமல் நமக்கு வேண்டியதைக் கொடுப்பவர்தான், இறைவன்' என்பது இதன் பொருள். அப்படி ஒரு கோவில் அமைந்த இடம்தான், சோமநாதன் மடம். இன்று இவ்வூர் 12 புத்தூர்' என்று வழங்கப்படுகிறது.

வடமொழி வல்லுனர்களான திண்டிமக்கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் 12 புத்தூர் இருக்கிறது. இவ்வூரே அருணகிரி நாதரின் பிறப்புத் தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊரில் சோமநாத ஜீயர் என்கிற சிறந்த சிவனடியார், மடம் ஒன்றை அமைத்து, வாழ்ந்து வந்தார்.

அருணாசலேஸ்வரரை தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர், அரிய தவ ராஜனாக விளங்கினார். இவரது பெருமைகளை, தனது திருப்புகழிலே புகழ்ந்துள்ளார் அருணகிரி நாதர். சோமநாத ஜீயர், அருணகிரிநாதரின் சம காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மடத்தில் முருகப்பெருமானை விசேஷமான முறையில் பூஜை புரிந்து வந்ததை, தனது திருப்புகழிலே பாடிப்பரவியுள்ளார் அருணகிரியார். இங்கே கிடைத்த கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன. கி.பி. 1348-ம் ஆண்டு வீரபொக்கண்ண உடையார் மகன் கம்பண்ண உடையார் என்பவர், வித்யாபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கவுரவித்துள்ளார்.

கி.பி. 1355-ம் ஆண்டு ஹரிஹர உடையார் காலத்தில், வித்யாபதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள், நித்திய பூஜை, திருவிழாக்கள் போன்றவை நடத்திட முழு சுதந்திரமும், நிலங்களும், சோமநாத ஜீயருக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாதஜீயர், இவ்வூர் மக்களால் 'ஐயன்' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன் பொருட்டு, பின் னாளில் இவ்வூர் 'ஐயன்புத்தூர்' என்று வழங்கப்பட்டு, தற்போது 12 புத்தூர் என்றாகி இருக்கிறது.

ஆலய அமைப்பு

கிழக்குப் பார்த்த திருக்கோவில் இது. ஒரு காலத்தில் தென்முக ராஜகோபுரம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின், சில படிகள் கொண்ட முக மண்டபம். இங்கே பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்பு சிற்பத்தைக் காணலாம். அதைக் கடந்தால் மகாமண்டபம். அதன் வலப்புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருண கிரிநாதருக்கு சிற்பங்கள் உள்ளன. மகா மண்டபத்தை அடுத்து, அந்தராளம் மற்றும் மூலஸ்தானம். கருவறைக்குள் வித்யாபதீஸ்வரர் அருளாட்சி செய்கிறார்.

ஆலய பிரகாரத்தில் கணபதி, அடுத்ததாக வள்ளி -தெய்வானையுடன் முருகப்பெருமான் தனித்தனிச் சன்னிதியில் உள்ளனர். கோமுகம் அருகே சண்டி கேஸ்வரர் உள்ளார். தென்முகம் பார்த்த நிலையில் அட்சரவல்லி அம்மன் சன்னிதி உள்ளது. சிறிய வடிவில் நின்ற கோலத்தில் அன்னை அருள்கிறார்.

இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. சகல கலைகளிலும் சிறப்புற்று விளங்க, இத்தல இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடலாம். எழுத்துத்துறையில் சிறந்து விளங்க, இத்தல அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். இத்தல முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து வணங்கினால், சிக்கல்கள் விலகும். பகை மறையும்.

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் உள்ள தாமரைபாக்கத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 12 புத்தூர் திருத்தலம்.

Tags:    

Similar News