வழிபாடு

சேலம் சின்ன மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: பெண்கள் கடவுள் வேடம் அணிந்து ஊர்வலம்

Published On 2024-08-09 06:43 GMT   |   Update On 2024-08-09 06:43 GMT
  • வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
  • கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

மேட்டூர்:

சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.

ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.

இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். 

Tags:    

Similar News