குரங்கு அம்மை தொற்றும்... தடுப்பு நடவடிக்கைகளும்
- குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது
- முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கொரோனா தொற்றை தொடர்ந்து குரங்கு அம்மை நோயும் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. சுமார் 50 நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் நமது நாட்டிலும் பரவினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்கிற ஆலோசனையிலும் மத்திய சுகாதார துறையினர் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதார துறை அதிகாரிகளும் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளரான ராஜேஷ்பூசன், மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குரங்கு அம்மைக்கு எதிரான முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3413 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் 86 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 11 சதவீதம் பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்திலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க வேண்டும். இதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் இதுபோன்ற தொற்றுகளையும் கண்டறிந்து வேரறுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பக்கத்து மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதனைக்குட் படுத்தப்படுகிறார்கள்.
குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலிகள் இருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த அறிகுறிகளுடன் வருபவர்களையும் இணை நோய் உள்ளவர்களையும் கண்டுபிடித்து குரங்கு அம்மை தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குரங்கு அம்மை நோய் தொடர்பாக கேரளாவில் இருந்து அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியை கவனமாக எடுத்துக் கொண்டு தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நோய் நமது மாநிலத்துக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியது அனைவரின் கடமையாகவும் மாறி இருக்கிறது.
குரங்கு அம்மை பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்:
* குரங்கு அம்மைக்கான அறிகுறி போல தோற்றமளிக்கும் சொறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவும்.
* குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் சொறி அல்லது சிரங்குகளைத் தொடாதீர்கள்.
* இந்த நோய் உள்ள நபருடன் முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ கூடாது.
* பாதிக்கப்பட்டவருடன் உண்ணும் பாத்திரங்கள் அல்லது கோப்பைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
* பாதிக்கப்பட்டவரின் படுக்கை, துண்டுகள் அல்லது ஆடைகளை பயன்படுத்தவோ தொடவோ கூடாது.
* சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை அடிக்கடி கழுவவும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்.
* நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த விலங்குகள், அவற்றின் படுக்கை அல்லது அவை தொட்ட பிற பொருட்களைத் தவிர்க்கவும்.
* குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் குறிப்பாக சொறி போன்று தென்பட்டால், முடிந்தவரை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.