உலக கோப்பையில் யாரும் படைக்காத சாதனையை படைத்த மெஸ்சி
- மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
- உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.messi, world cup football, மெஸ்சி, உலக கோப்பை கால்பந்து
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்தார்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.
அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.
35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு கோபா அமெரிக்க கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தற்போது உலக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். மரடோனாவை போலவே மெஸ்சியும் அர்ஜென்டினாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.
இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்துள்ளார். எந்த ஒரு வீரரும் உலக கோப்பையில் அனைத்து நிலைகளிலும் கோல் அடித்தது இல்லை.
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்சிக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது.
உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.
மெஸ்சி ஒட்டு மொத்த உலக கோப்பைகளிலும் சேர்த்து 13 கோல்கள் அடித்துள்ளார். 26 ஆட்டத்தில் அவர் இந்த கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.
குளூஸ் (ஜெர்மனி) 16 கோல்களுடன் முதல் இடத்திலும், ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்களுடன் 2-வது இடத்திலும், ஜெரார்டு முல்லா (மேற்கு ஜெர்மன்) 14 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்சை சேர்ந்த பாண்டைனுடன் இணைந்து மெஸ்சி 4-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 13 கோல்கள் அடித்துள்ளனர்.
உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். அவர் 26 ஆட்டத்தில் ஆடி லோத்தர் மேத்யூசை (ஜெர்மனி) முந்தினார். மேத்யூஸ் 25 ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.
உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்சி படைத்தார். அவர் மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் ஆடியதே சாதனையாக இருந்தது. மெஸ்சி தற்போது அவரை முந்தியுள்ளார்.
உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சி கால்பந்தில் அனைத்து காலக்கட்டத்திலும் தான் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் கோப்பையை கைப்பற்றி சரியான பதிலடி கொடுத்து விட்டார்.