அழகுக் குறிப்புகள்

கூந்தலுக்கு பிரச்சனை வராத 5 வகையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை

Published On 2023-05-24 04:51 GMT   |   Update On 2023-05-24 04:51 GMT
  • ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
  • வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.

வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம். ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

இயற்கை டை 1:

தேவையானவை: தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி - தலா 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு, கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரைமுடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம். இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.

இயற்கை டை 2:

தேவையானவை: மருதாணி இலை - கைப்பிடி அளவு, நெல்லிக்காய் - 2, காபிக் கொட்டை - சிறிதளவு, கொட்டைப்பாக்குப் பொடி - 3 டீஸ்பூன்.

செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

இயற்கை டை 3:

தேவையானவை: வால்நட் பொடி - 3 டீஸ்பூன், அவுரி இலை - சிறிதளவு, சாமந்திப்பூ - சிறிதளவு, ரோஸ்மெர்ரி இலைகள் (உலர்ந்தது) - சிறிதளவு. இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

செய்முறை: அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து, தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை முடியில் தடவி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

இயற்கை டை 4:

தேவையானவை: ஆற்றுத்தும்மட்டி பழச் சதை - 1 கப், நெல்லிப்பழச் சதை - 1 கப், கரிசாலை இலை விழுது - 1 கப், தேங்காய் எண்ணெய் - 500 மி.லி.

செய்முறை: பழச் சதையையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி, வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை முடிப்பராமரிப்புக்குப் பயன்படுத்தினால், நாளடைவில் இளநரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும். கேசத்தை அலச, சீயக்காய் பொடி அல்லது `உசில்' என்னும் அரக்குப் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.

பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

இயற்கை டை 5:

தேவையானவை: செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை, அவுரி இலை - தலா கைப்பிடி அளவு, வெந்தயம் - 3 டீஸ்பூன்.

செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு இவற்றைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைக் கேசத்தில் பூசிவர, கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Tags:    

Similar News