அழகுக் குறிப்புகள்

கால் அழகை கெடுக்கும் பித்த வெடிப்பு வரக்காரணமும்... தடுக்கும் வழிமுறையும்...

Published On 2023-01-29 06:17 GMT   |   Update On 2023-01-29 06:17 GMT
  • தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.
  • ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும்.

எப்போதும் நீரில், சேற்றில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்த வெடிப்பு. மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்டநேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடுமுரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற, தரமற்ற செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

சொரியாசிஸ் என்ற காளாஞ்சக படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களை பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு கை, கால்களை சுத்தமாகக் கழுவாததாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம். நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்பட கூடும்.

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.

கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச்செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.

Tags:    

Similar News