தலைக்கவசம் அணிந்தால் முடி உதிருமா?
- தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
- வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இப்போது பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. சாலை பயணத்தின்போது உயிர் காக்கும் உன்னத கவசமாக பயன்படும் அதனை அணிவதை இன்றைய இளைஞர்கள் பலரும் அசவுகரியமாக கருதுகிறார்கள்.
தலைக்கவசம் அணிந்தபடி நீண்ட தூரம் பயணம் செய்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டும் இளம் பெண்களிடமும் இருக்கிறது. ஆனால் தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
தலைகவசம் அணியும்போது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று தடைபடும். அப்படி ஹெல்மெட் வழியாக காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் போனால் வியர்வை உருவாகி அது முடியில் படிந்துவிடும். அதனால் முடி உதிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.
ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலமே கிடைத்துவிடும்.
தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.
தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.
காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.
ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.