அழகுக் குறிப்புகள்

பெண்களின் பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

Published On 2023-05-08 05:41 GMT   |   Update On 2023-05-08 05:41 GMT
  • மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.
  • சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* 300 மி.லி தேங்காய் எண்ணெயில் 150 மி.லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி வடிகட்டி, பெண்கள் 21 நாட்கள் தலையில் தடவிவந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

* வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்துக் குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளரும். முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் வேர்க்கால்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டவை. மேலும், முடியை மென்மையாகவும் பொலிவோடும் வைக்கும்.

* ஆண்கள், கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிப்பதற்கு முன்பு, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; இளநரை குறையும்.

* முடி வளரும்போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், முடியின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.

* வாரம் ஒருமுறை தவறாமல் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து, நன்கு ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இதனால், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

* சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆண்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை தலைக்குச் சீப்பைப் பயன்படுத்தித் தலை சீவலாம். இதனால், முடியின் வேர், புத்துணர்ச்சியுடன் இருக்கும். கூர்மையான பிளாஸ்டிக் சீப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிருதுவான முதல் தர பிளாஸ்டிக் அல்லது மரச் சீப்பைப் பயன்படுத்தலாம்.

* கோடை காலங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடியின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். சூரியக் கதிர்கள் தலைப்பகுதியைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் புறஊதா பி கதிர்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி வறட்சியை ஏற்படுத்தும். எனவே, வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டோ செல்லலாம்.

* பெண்கள், தங்களது அடர்ந்த கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைக்குச் சீப்பு பயன்படுத்த வேண்டாம். முடி ஈரமாக இருக்கும்போது வலிமை இழந்து இருக்கும். அப்போது, சீப்பைப் பயன்படுத்தினால், முடி வேரோடு வந்துவிடும். முடி உலர்ந்த பின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும்.

* அதீத வெப்பம் தலைமுடியைப் பாதிக்கும். தலைக்குக் குளித்த பின்னர், முடியை உலரவைக்க பலர், எலெக்ட்ரானிக் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதால், முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இவ்வாறு தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலரவைப்பதுதான் நல்லது. தலைக்குக் குளித்தவுடன் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

* வெங்காயத்தை நீரில் வேகவைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம். வெங்காயச் சாற்றைக்கொண்டு முடியை மசாஜ் செய்து, ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம், முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

* கண்டிஷனர் முடிக்கு நல்லதுதான். ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்துவதால் ஏற்படும் வறட்சியைப் போக்கி, முடியை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். தரமற்ற கண்டிஷனர் முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான கண்டிஷனரானத் தயிரைப் பயன்படுத்தலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

* குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவாகத் தூங்கினால், முடி ஆரோக்கியத்தை இழந்துவிடும். தினமும், போதிய அளவு தூங்குங்கள். இதனால் முடியின் ஆரோக்கியமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

* தினமும் தலைக்குக் குளித்தால், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை வெளியேறிவிடுவதோடு, முடி, பொலிவை இழந்துவிடும். முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளித்தால் போதும்.

* காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால், முடியின் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்கும். முடியின் வேர்கால்களில் இயற்கையான எண்ணெய்ப் பசை நிலைத்திருக்கும்.

Tags:    

Similar News