அழகுக் குறிப்புகள்

பருவமழை காலங்களில் முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Published On 2024-07-07 03:03 GMT   |   Update On 2024-07-07 03:03 GMT
  • பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • பருவ கால மாறுபாட்டின்போது வெப்பம் அதிகமாக வெளிப்படும்.

கோடை காலம் முடிவடைந்து நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெண்கள் பலர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

இத்தகைய பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது. வானிலையில் ஏற்படும் மாற்றமும், மாறும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றமும் முடி உதிர்தலுக்கு வித்திடும்.

பொதுவாகவே குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்பானது. முடி வளர்ச்சி அடைவதற்காக இயற்கையாக நடைபெறும் சுழற்சியின் ஒரு அங்கமாக முடி உதிரும். ஆனால் அதிகம் முடி உதிர்வது பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

பருவ கால முடி உதிர்வுக்கான காரணங்கள்

ஈரப்பதம்

ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உச்சந்தலையின் ஈரப்பத சமநிலையை பாதிக்கலாம். முடி வறட்சி அடையவோ அல்லது அதிகப்படியான எண்ணெய் உற்பத்திக்கோ வழிவகுக்கலாம். இவை இரண்டுமே முடி உதிர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

சூரிய ஒளி

தலை முடியில் சூரிய கதிர்வீச்சு அதிகம் படும்போது முடியின் மயிர்கால்கள் சேதமடையக்கூடும். முடி உடைவதற்கும் காரணமாகிவிடும்.

வெப்பநிலை மாற்றம்

பருவ கால மாறுபாட்டின்போது சில சமயங்களில் வெப்பம் அதிகமாக வெளிப்படும். சில சமயங்களில் மேகக்கூட்டங்கள் ஒன்று திரண்டு மந்தமான காலநிலையை ஏற்படுத்தும். வெப்பநிலையில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் உச்சந்தலை முடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதுவும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

தடுக்கும் வழிகள்

* தலைமுடி, கெரட்டின் என்னும் ஒரு வகை புரதத்தால் ஆனது. பால், பன்னீர், தயிர், முட்டை, கோழிக்கறி, மீன், சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் போதுமான அளவு புரதங்கள் உள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

* உண்ணும் உணவில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவையும் முடி வளர்ச்சிக்கும், முடி வலிமைக்கும் உதவிடும். கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது.

முட்டை, நட்ஸ் வகைகள், முழு தானியங்களில் வைட்டமின் பி காணப்படுகிறது. இறைச்சிகள், கீரைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து உள்ளடங்கி இருக்கிறது. நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் துத்தநாகம் உள்ளடங்கி இருக்கிறது. இவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூந்தல் நலனை மேம்படுத்தலாம்.

* தலைமுடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

* ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை பாதுகாக்கும் இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையில் இருந்து நீங்க வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் தலைமுடியை அலசுவதை தவிர்க்க வேண்டும். முடி வறட்சி அடைவதற்கும், முடி உடைவதற்கும் அது வழிவகுக்கும்.

* ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடி உடைவதை குறைக்கவும் முடியும்.

* உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மயிர்க்கால்களை மேம்படுத்துவதற்கும் தலையில் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.

* உச்சந்தலையில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை நீக்குவதும் முடி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உண்டாக்கும்.

* சூரிய வெப்பத்தில் இருந்து தலை முடியை பாதுகாக்க, தொப்பி அணியலாம்.

* நீச்சல் குளம் மற்றும் கடலில் குளித்தால் உடனே நல்ல தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும்.

Tags:    

Similar News