அழகுக் குறிப்புகள்

பட்டுத்துணிகளை பராமரிப்பது எப்படி?

Published On 2022-12-12 08:00 GMT   |   Update On 2022-12-12 08:00 GMT
  • மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.
  • சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

திருமணத்துக்கு எடுக்கப்படும் முகூர்த்தப்பட்டு சேலையை பெண்கள் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பாதுகாப்பது வழக்கம். ஆனால் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் அதன் ஆயுள் காலத்தை மேலும் கூட்ட முடியும். சிலர் பட்டு சேலையை ஏதாவது விழாவுக்கு கட்டிக்கொண்டு செல்வார்கள். வீட்டிற்கு திரும்பியதும் உடனே மடித்து பெட்டியில் வைத்து விடுவார்கள்.

வியர்வை ஈரத்துடன் அந்த சேலை மடித்து வைக்கப்படுவதால் அதனை பூச்சிகள் அரித்து பட்டுச்சேலையின் சரிகை கருத்துப்போய் விடுகிறது. இதனால் சேலையின் பளபளப்பு குறைந்து அது கிழிந்து விடும் நிலைக்கு உள்ளாகிறது. அதனை தவிர்க்க சேலையை கழற்றியதும் உடனடியாக மடித்து வைக்காமல் மின்விசிறி காற்றில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை அயர்ன் செய்து பீரோவில் வைத்து அத்துடன் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் சேலைகளை பூச்சி அரிக்காது.

மாதம் ஒருமுறை எல்லாப் பட்டு புடவைகளையும் வெளியில் எடுத்து நிழல்பட உலர்த்தி அயர்ன் செய்து வைத்தால் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த சேலைகள் புதியதுபோலவே இருக்கும். மேலும் அதை பாதுகாக்க துணிப்பைகளை தைத்து அதில் சேலையை மடித்து வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜரிகை கருக்காது. அத்துடன் மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.

பட்டுப்புடவைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றை மரபீரோவில் வைத்து பராமரிக்கலாம். பட்டுச்சேலை மற்றும் பட்டு ஜாக்கெட் அணிந்து வெளியே சென்று திரும்பும்போது ஜாக்கெட் வியர்வையில் நனைந்து இருக்கும். அதனை லேசாக ஷாம்பு போட்டு கசக்கி அலசி காய வைக்க வேண்டும். அதற்கு சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் அதிக காரத்தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவதால், ஜாக்கெட் பொலிவிழந்து கிழிந்து விடும். இந்த ஆலோசனைகள் பட்டுச்சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மட்டும் அல்ல... பாரம்பரிய பட்டு ரகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

Tags:    

Similar News