சரும பொலிவை அதிகரிக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்கள்
- சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சுரைசர்கள் உதவும்.
- பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும்.
மழை மற்றும் பனிக்காலங்களில் சரும வறட்சி பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். இந்த நேரங்களில் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு மாய்ஸ்சுரைசர்கள் உதவும். இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக மாய்ஸ்சுரைசர்கள் தயாரித்து பயன்படுத்த முடியும். இவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும். அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்
ஆலிவ் எண்ணெய்யில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும். சருமத்தில் இருக்கும் மெல்லிய சுருக்கங்களையும் அகற்றும். ஆலிவ் எண்ணெய்யுடன் சம அளவு எடுத்து தேன் கலந்து நன்றாக குழைக்கவும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
யோகர்ட் மற்றும் சர்க்கரை
சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்துக்கு புத்துணர்வு அளிக்கும் தன்மை யோகர்ட்டில் உள்ளது. இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் பூசி, வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்திற்கு பொலிவையும், மென்மையையும் அளிக்கும்.
கற்றாழை
கற்றாழையின் மேல் தோலை சீவி, அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்றான ஜெல்லை எடுக்க வேண்டும். அதை பலமுறை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்திய பின்னர் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அந்த ஜெல்லை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தில் உண்டாகும் காயங்களை குணப்படுத்தும் தன்மையும் கற்றாழைக்கு உண்டு.
தேங்காய் எண்ணெய்
தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை சிறு கிண்ணத்தில் ஊற்றி மிதமாக சூடுபடுத்த வேண்டும். அதை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு உடலில் வறைட்சி அடைந்து இருக்கும் இடங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, வறட்சி நீக்கி பொலிவை அதிகரிக்கும்.
பப்பாளி மற்றும் தேன்
பப்பாளியில் இருக்கும் மூலக்கூறுகள் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கும். பழுத்த பப்பாளி பழத்தின் மேல் தோலை நீக்கி சதைப்பற்றான பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பசைபோல கலந்துகொள்ளுங்கள். இதனை சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
பால் மற்றும் பாலாடை:
பாலாடையுடன் சிறிதளவு பால் சேர்த்து பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். பால், சருமத்தின் மிருதுவான தன்மையை பாதுகாக்கும். சருமத்துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும்.