முகப்பரு, பொடுகு தொல்லை: வேம்புவை எப்படி பயன்படுத்தலாம்..
- வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
- வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.
வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.
வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.