அழகுக் குறிப்புகள்

முகப்பருக்களைத் தடுக்க... தவிர்க்க..

Published On 2022-12-02 05:34 GMT   |   Update On 2022-12-02 05:34 GMT
  • முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
  • பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி.

சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருள்களை மற்றவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.

Tags:    

Similar News