அழகுக் குறிப்புகள்

கொரியர்களின் இளமையின் ரகசியம் இதுதானாம்...!

Published On 2024-03-17 09:45 GMT   |   Update On 2024-03-17 09:45 GMT
  • சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
  • சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

 

1. சரும பராமரிப்பு:

கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலக்காதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம்தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 2. சன்ஸ்கிரீன் பயன்பாடு:

சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமான நாட்களில் கூட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நேராமல் தற்காத்துக்கொள்ள அவை உதவுகின்றன.

3. புளிப்பு வகை உணவு:

கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உட்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கும் வித்திடும் புரோபயாட்டிக்குகள் நிறைந்தவை.

4. நீர் அருந்துதல்:

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

5. தூக்கம்:

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்திற்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.

7. மன அழுத்தம்:

மன அழுத்தமும் முகப்பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.

8. உணவு வழக்கம்:

கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பேணவும் வழிவகுக்கிறது.

Tags:    

Similar News