இனி நாமும் செய்யலாம் ஹோம்மேட் ஆர்கானிக் சோப்
- குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும்.
- சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.
பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது. நாம் வீட்டிலேயே சோப்களை தயார் செய்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.
கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும்.
கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார்.
வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.