அழகுக் குறிப்புகள்

பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Published On 2023-03-30 05:09 GMT   |   Update On 2023-03-30 05:09 GMT
  • நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.
  • அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும்.

'ஆள் பாதி ஆடை பாதி' என்பதற்கு ஏற்ப, நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதை அறிந்து மாற்றிக்கொண்டால், மேலும் தன்னம்பிக்கையோடும், அழகோடும் திகழலாம். அதற்கான குறிப்புகள் இதோ…

கண்களை உறுத்தாத ஆடைகள்: நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, சுடிதார் டாப்ஸ்சுக்கு தேர்வு செய்யும் லெக்கின்ஸ்சில் இந்தத் தேர்வு முக்கியம். உயரம் குறைவான டாப்ஸ் அணியும் போது, அதற்கு லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பக்கவாட்டில் திறந்திருக்கும் வகையிலான ஆடை உடுத்தினால், லெக்கின்ஸ் அணியாமல், பளாசோ, சாதாரண சுடிதார் பேண்ட், ஜீன்ஸ் போன்றவற்றை தேர்வு செய்து அணியலாம். லெக்கின்ஸ், உடலுடன் ஒட்டிக் கொள்ளும் என்பதால், பிறரின் கவனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அனார்கலி, உயரம் அதிகமான டாப்ஸ்சுக்கு லெக்கின்ஸ் அணியலாம். அதேபோல், தரமான துணிகள் வாங்குவதும் முக்கியம். பளாசோ அணியும் போது, டாப்ஸ் கணுக்கால் வரையில்லாமல், முழங்கால் வரை இருக்கும்படி அணியலாம். சரும நிற லெக்கின்ஸை தவிர்த்து, அடர் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

உள்ளாடையில் கவனம்: உள்ளாடையில், எலாஸ்டிக் தளர்வாகவோ, ஒருபுறம் ஏற்ற, இறக்கத்துடனோ இருப்பவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது, அணியும் உள்ளாடை சரியாகவும், அடர் நிறத்திலும் இருக்க வேண்டும். மேலே அணியும் ஆடை மெல்லியதாக இருந்தால், உள்புறம் 'சிலிப்' போன்ற உள்ளாடையைத் தேர்வு செய்து அணியலாம்.

நிறத்தேர்வில் தெளிவு: அடர் நிற மேலாடையைத் தேர்வு செய்யும்போது, அதற்கேற்ப இணை உடை, லேசான நிறத்திலோ அல்லது அதற்கு ஒத்துப் போகும் நிறத்திலோ இருக்க வேண்டும். மேலே அணியும் டாப்ஸில் அதிக டிசைன் இருந்தால், அதற்கு அணியும் பேண்ட், டிசைன் இல்லாமல் இருக்கலாம். இது போன்று அணிந்தால், நம் அழகை மேலும் மெருகேற்றிக்காட்டும்.

நகைகளில் அழகு: அணிந்திருக்கும் ஆடை ஆடம்பரமாக இருந்தால், நகை சாதாரணமாக இருக்கலாம். கழுத்தில் ஆடம்பரமான பெரிய நகைகள் அணிந்தால், காதுக்கு சிறிய காதணியை தேர்ந்தெடுக்கலாம். மார்டன் உடைகள் உடுத்தும் போது, ஆடம்பரமான பெரிய நகையை அணியாமல், சாதாரண வகையிலான சிறிய நகைகள் போடலாம்.

சரியான அளவு: அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும். எனவே, தேர்வு செய்யும் ஆடை, நமக்கு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கைப்பை: பெண்களுக்குத் தேவைப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று, ஹேண்ட் பேக். அலுவலகத்திற்கு பெரிய கைப்பைகள் எடுத்துச் சென்றாலும், விசேஷங்களுக்குச் செல்லும்போது சிறிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யலாம். ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யாமல், நடுத்தர அளவிலான கைப்பைகளை வாங்குவது சிறந்தது.

Tags:    

Similar News