நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் பற்றி சில........
- வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
- வாசனை எண்ணெய்கள் இயற்கையான வாசனையை வழங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர். எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம்.
இந்த கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம். ஒவ்வொரு வாசனை திரவிய வகைகளும், அதில் சேர்க்கப்படுகின்ற 'எசன்ஷியல் ஆயில்' என்று சொல்லப்படும் எண்ணெய்யின் செறிவைப் பொறுத்து மாறுபடும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே...
பெர்ஃபியூம்:
இந்த நறுமணக் கலவையில் 20 முதல் 30 சதவீதம் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு கலந்திருக்கும். இது அதிக செறிவு கொண்டது. எண்ணெய்களின் அதிக செறிவு காரணமாக மற்ற எல்லா வகைகளை காட்டிலும் இது விலை உயர்ந்தது. இதன் நறுமணம் 24 மணி நேரம் வரை நீடிக்கும். பெர்பியூமில் குறைந்த அளவு ஆல்கஹால் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
ஈவ் டி பொபியூம்:
15 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை சாறு கலந்திருக்கும் நறுமணக் கலவை இதுவாகும். இந்த கலவையில் சற்றே அதிக ஆல்கஹால் மற்றும் நீர் கலந்திருக்கும். இது 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். ஆல்கஹால் கலப்பு சற்று அதிகமாக இருந்தாலும், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற நறுமணக்கலவை இதுவாகும்.
ஈவ் டி டாய்லெட்:
இந்த வாசனை திரவிய வகையானது 5 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது நறுமணச்சாறு கொண்டது. இதன் வாசம் 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது உடலையும், கூந்தலையும் நறுமணப்படுத்த பயன்படுகிறது.
ஈவ் டி கொலோன்:
ஆண்களுக்கான வாசனை திரவியமாக கருதப்படும் இதில், 2 முதல் 4 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு நிறைந்திருக்கும். இது 2 மணி நேரம் வரை நீடிக்கும். விலையும் மலிவானது.
ஈவ் பிரைஸ்:
இந்த வகை வாசனை திரவியமானது. 1 முதல் 3 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனைச் சாறு கொண்டது. தண்ணீர்தான் இதன் முக்கிய மூலப்பொருள். இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும்.
வாசனை எண்ணெய்கள்:
உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க உதவுபவையே வாசனை எண்ணெய்கள், ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை விட இவை அதிக சக்தி வாய்ந்த, இயற்கையான வாசனையை வழங்குகின்றன.